பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவரை, அவரது நிலையை நிரூபிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து ‘குளுக்கோஸ்’ பாட்டிலுடன் அலுவலகத்திற்கு வரவழைத்த அதிகாரியின் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நர்சரி பள்ளியில் அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றும் பெண் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவர் பணிக்கு வராதது குறித்து அலுவலக நிர்வாகம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவி மிகவும் உடல்நலக்குறைவாக இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஊழியரின் கணவர் கூறியதை நம்ப மறுத்த அதிகாரி, அந்தப் பெண் உண்மையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதற்கான ‘ஆதாரத்தை’ நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி, அந்தப் பெண்ணின் கணவர், கையில் குளுக்கோஸ் ஏறிய நிலையில் இருந்த தனது மனைவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், உடல் நடுங்கியபடி, நடக்கக் கூட முடியாமல் தவிக்கும் அந்தப் பெண்ணை, அவரது கணவர் தாங்கிப் பிடித்து அழைத்து வருகிறார். ஒரு கையில் குளுக்கோஸ் பாட்டிலை ஏந்தியபடி, மற்றொரு கையால் மனைவியைத் தாங்கி அலுவலகத்திற்குள் நுழைகிறார். அந்தப் பெண் மிகுந்த உடல் மற்றும் மன வேதனையுடன் அழுவதைக் காண முடிகிறது.

அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் அந்தப் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. “இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் ஒருவரை எப்படி நேரில் வரச் சொல்லலாம்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பலரும், “ஏழைகளின் மீது அதிகார வர்க்கத்திற்கு ஒரு துளி கூட கருணை இல்லை” என்றும், “இது போன்ற மனிதாபிமானமற்ற அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கன்வாடி மற்றும் அடிமட்ட அரசு ஊழியர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விடுமுறை நடைமுறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது.