மத்திய பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மே 12-ஆம் தேதி இரவு முன்னாள் பெண் நீதிபதி கிரிபாலா சிங்கின் மருமகள் ட்விஷா சர்மா, வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஐந்து நாள் காவலில் எடுத்துள்ள முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங் மற்றும் அவரது மகன் சமர்த் சிங் ஆகியோரை இன்று காலை அவர்களது வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மரணம் நிகழ்ந்த மே 12-ஆம் தேதி இரவு என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறிய, ஒரு பொம்மையைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிகள் குற்றக் காட்சியை மீண்டும் மறுவடிவமைப்பு செய்து சோதித்தனர்.
#WATCH | Bhopal | Twisha Sharma death case | As part of CBI’s ongoing investigation, the CBI team, along with Twisha’s mother-in-law Giribala Singh and husband Samarth Singh, recreate the crime scene at their residence in Bhopal. pic.twitter.com/6N5vaQExXt
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 1, 2026
இந்த விசாரணையின் போது, சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங், தூக்குக் கயிற்றின் முடிச்சைத் தானே அவிழ்த்து அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை விளக்கிக் காட்டினார். தொடர்ந்து, அவரது மகன் சமர்த் சிங், தூக்கில் தொங்கிய பொம்மையைக் கீழே இறக்கி, அன்றைய இரவு சடலத்தை எவ்வாறு மீட்டோம் என்பதைச் செய்து காண்பித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ட்விஷாவின் உயரத்தை மறுஆய்வு செய்து நடத்திய இரண்டாவது உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் வராத நிலையில், சிபிஐ காவல் ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைவதால் இருவரும் நாளை போபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
