நாட்டின் தலைநகரான டெல்லியில் மீண்டும் ஒரு கொடூரமான கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்த திருமணமான பெண் ஒருவர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தத் தனியார் பேருந்தும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள டெல்லி காவல்துறை, அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், ஓடும் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

“>