நாசிக் நகரில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் புகாரில், முக்கியக் குற்றவாளியான நிதா கானுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான நிதா கான், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், ‘ஜெய்ஷ்-இ-முகமது’ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது வெறும் பணியிடத் துன்புறுத்தல் மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் வழியாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கும் ‘ஒயிட் காலர்’ பயங்கரவாதச் சதித் திட்டமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தொடர்பு குறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த வழக்கில் களமிறங்கியுள்ளது. இதற்காக ஒரு தனிப்படை விரைவில் நாசிக் விரைந்து விசாரணையைத் தொடங்கவுள்ளது. மேலும், என்.ஐ.ஏ (NIA) மற்றும் ஏ.டி.எஸ் (ATS) போன்ற மத்தியப் புலனாய்வு முகமைகளும் இந்த நெட்வொர்க் குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
டிசிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 12 பெண் ஊழியர்கள், நிதா கான் மற்றும் குழுத் தலைவர்கள் மீது பாலியல் மற்றும் மன ரீதியான புகார்களை அளித்துள்ளனர். தங்களை இஸ்லாமியச் சடங்குகளைப் பின்பற்றுமாறும், தொழுகை செய்யுமாறும் அவர்கள் கட்டாயப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தில் 9 எப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து டாட்டா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கவலை தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் சார்பில் மூத்த அதிகாரி ஆர்த்தி சுப்ரமணியன் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் பயங்கரவாத அமைப்புகளுடன் கார்ப்பரேட் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பது தேசியப் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.
