திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
“தேர்தல் என்று வரும்போது கூட்டணிக் கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும், நாங்களும் தியாகம் செய்துள்ளோம்” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது மதுரை வடக்குத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதிக்கும், மாணிக்கம் தாகூருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மாணிக்கம் தாகூர், “கூட்டணியில் எந்தத் தொகுதி கிடைக்கிறதோ இல்லையோ, மதுரை வடக்குத் தொகுதியை கண்டிப்பாக காங்கிரஸுக்குப் பெற வேண்டும் என்று அகில இந்தியத் தலைவர் கார்கேவிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
எந்தெந்தத் தொகுதிகள் எந்தக் கட்சிக்கு என்பது வரும் நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
