தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-விற்கும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சவால் விடுத்திருந்தார். “இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது; உங்களுக்குத் தைரியமும், தில்லும் இருந்தால் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக ஜெயித்துக் காட்டட்டும்” என அவர் பேசியிருந்தார்.
திடீரென அமைச்சர் பதவிக்கு வந்துவிட்டு, அந்தப் பதவியின் கண்ணியத்தை மறந்து தைரியம், தில் என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா பேசுவது முற்றிலும் நாகரிகமற்ற செயல் என்று அனிதா ராதாகிருஷ்ணன் விளாசியுள்ளார்.
இது பற்றி பதிவிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், “நாங்கள் தமிழக மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்; வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஏதோ ஒரே ஒரு மேயர் பதவியை மட்டுமல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மாஸ் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேயர் பதவிகளையும், உள்ளாட்சி அமைப்புகளையும் திமுகவே முழுமையாகக் கைப்பற்றும்” என்று சூளுரைத்துள்ளார்.
மேலும், “ஒருவேளை நாங்கள் அனைத்து மேயர் பதவிகளையும் வென்று காட்டினால், நீங்கள் அரசியலை விட்டு ஓடத் தயாரா?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஓப்பனாகவே சவால் விடுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே திமுக மற்றும் தவெக இடையே வெடித்துள்ள இந்த சவால் அரசியல், தமிழகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
