இலங்கை உள்நாட்டுப் போரின்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் “நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – நீதிக்கான நம்பிக்கையை கூட” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, போரின்போது பாதுகாப்பு படையினரால் ஈழத்தமிழ் பெண்களும் விடுதலைப் புலிகளும் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை ஆதாரங்களுடன் விளக்குகிறது.
இது போரை வெல்வதற்கும், மக்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கும் ஒரு ஆயுதமாகவே பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் இந்த அறிக்கை, சுமார் 17 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் தீராத உடல் உபாதைகள், மன உளைச்சல் மற்றும் சமூகப் புறக்கணிப்புகளுக்கு ஆளாகி வருவதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது. எனவே, கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் முறையான மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்களுக்குத் தேவையான சமூக மற்றும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்கவும் ஒரு சுதந்திரமான சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு வலுவான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
