ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களால் இணையச் சேவைகள் மற்றும் வான்வழிப் போக்குவரத்து முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதால், ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் தங்களது பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் அவசரத் தேவைகளுக்கு இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
