அரியானா மாநில அரசு தனது அனைத்து அரசுத் துறைகளிலும் ‘ஹரிஜன்’ மற்றும் ‘கிரிஜன்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சொற்கள், இந்திய அரசியலமைப்பில் எங்கும் இடம்பெறவில்லை என்பதையும், இவை பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முறையான சொற்கள் அல்ல என்பதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இனிவரும் காலங்களில் அரசு ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதப் போக்குவரத்துகளில் ‘பட்டியலினத்தவர்’ மற்றும் ‘பழங்குடியினர்’ என்ற சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அலுவலகம் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையானது சமூக நீதியை நிலைநாட்டும் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது. ‘ஹரிஜன்’ மற்றும் ‘கிரிஜன்’ போன்ற சொற்கள் இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், அவை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையைப் பிரதிபலிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அம்பேத்கர் ஆதரவாளர்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் உச்ச நீதிமன்றமும் இது போன்ற சொற்களைத் தவிர்க்குமாறு முன்னரே அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரியானா அரசு இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.