தலைநகர் டெல்லியின்  கோவிந்தபுரியில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, டெல்லி கல்காஜி அருகே உள்ள கோவிந்தபுரி, தெரு எண் 10-ல் வசிப்பவர் விஷ்ணு சாஹு. இவர் வாராந்திர சந்தைகளில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாரதா சாஹு (38), இவர்களது 13 வயது மகன் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் விஷ்ணு சாஹு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மனைவியும் மகனும் உடலில் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நள்ளிரவு 1.11 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள்  தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இந்த இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்கள் டெல்லி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது  போலீஸார் கொலை மற்றும் திருட்டு வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.