கர்நாடக மாநிலம் பெங்களூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் 24 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சாய்பாபு சென்னுரு என்ற இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார். ஆனால், இந்த நட்பை தவறாகப் பயன்படுத்தி, சாய்பாபு நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட முயன்றபோது, கத்தியைக் காட்டி அவரை மிரட்டியுள்ளார்.
சாய்பாபு, இளம்பெண்ணை அநாகரிகமாக புகைப்படம் எடுத்து, அவரிடம் 70,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், அவரது தொலைபேசி மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு 14,000 ரூபாயை மாற்றிக் கொண்டார். பின்னர், இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமாவது கூறினால், புகைப்படங்களை இணையத்தில் பரப்புவேன் என்றும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பெங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான சாய்பாபு சென்னுருவை கைது செய்தனர். தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
