கர்நாடகாவின் கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவில் உள்ள மல்கேடா கிராமத்தைச் சேர்ந்த சென்மபசப்பா, அங்கு சிமெண்டு தொழிற்சாலையில் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி வந்தார். அவரது மகள் பாக்யஸ்ரீ (வயது 20), பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒரு மாதம் முன்பு, நடைப்பயிற்சியின்போது மர்மமான முறையில் காணாமல் போனார்.
அவரது அக்கா மளிகைக் கடையில் பொருள் வாங்கச் சென்ற சிறிது நேரத்தில், பாக்யஸ்ரீ மாயமானார். தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று காலை, தொழிற்சாலை அருகே கால்வாயில் அவரது உடல் அழுகிய நிலையில், காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மஞ்சுநாத் என்பவர் இந்தக் கொலையைச் செய்தது உறுதியானது. மஞ்சுநாத்தின் அண்ணன் வினோத், அதே தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருக்கு பணி நிரந்தரம் செய்யப்படுவதை சென்மபசப்பா தடுத்ததால், மனமுடைந்த வினோத் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு பழிவாங்கும் வகையில், சென்மபசப்பாவின் மகள் பாக்யஸ்ரீயை மஞ்சுநாத் கடத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாகக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் மஞ்சுநாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
