காதலனுடன் இணைந்து கணவனை கொல்ல முயன்ற சுனந்தா என்ற பெண், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை முயற்சியில் கணவர் உயிர் தப்பினார். இந்தி நகரில் உள்ள அக்கமஹாதேவி நகரில் வாடகை வீட்டில் பீரப்பா மாயப்ப பூஜாரி, தனது மனைவி சுனந்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். சுனந்தா, சித்தப்பா கயத்தகேரி என்ற ஆணுடன் தகாத உறவில் இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த உறவுக்கு தடையாக இருந்த தனது கணவரை கொல்லும் நோக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு இரவு, பீரப்பா தூங்கிக் கொண்டிருந்தபோது, சுனந்தா தனது காதலன் சித்தப்பா மற்றும் அவரது நண்பனுடன் சேர்ந்து, அவரை கொல்ல முயன்றுள்ளார். இருவரும் வீட்டிற்குள் புகுந்து பீரப்பாவின் மார்பில் அமர்ந்து கழுத்தை நெரித்துள்ளனர். உடனடியாக பீரப்பா விழித்து அவரை உதைத்துள்ளார். இவர் எழுப்பிய சத்தத்தில் வீட்டு உரிமையாளர் விழித்துக் கொண்டு கதவைத் தட்டியுள்ளார். அப்போது பீரப்பாவின் 8 வயது மகன் கதவைத் திறந்துள்ளான்.

இதையடுத்து சித்தப்பா மற்றும் அவரது நண்பர் வீட்டை விட்டு தப்பி ஓடினர். பீரப்பா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் புகாரின் பேரில் சுனந்தா கைது செய்யப்பட்டார். கொலை முயற்சியில் ஈடுபட்ட சித்தப்பா கயத்தகேரி மற்றும் அவரது நண்பர் தலைமறைவாக உள்ளனர். எனினும், சித்தப்பா எங்கோ இருந்து வெளியிட்ட ஒரு வீடியோவில், சுனந்தா தான் இந்தக் கொலை முயற்சியை திட்டமிட்டதாகவும், நாளும் நேரமும் அவரே தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்தி ஷஹார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.