வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, தனது பேத்தி ஷியாமளா (21) உடன் வீட்டில் உறங்கி இருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர் கொண்ட மர்ம முகமூடி கும்பல், வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் ஜெயலட்சுமி மற்றும் ஷியாமளா இருவரையும் கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் நகைகள் கொடுக்காவிட்டால் கொலை செய்வோம் என கூறினர்.
ஷியாமளாவின் கழுத்தை நெரித்து மிரட்டிய கொள்ளைக் கும்பல், நகை இருக்கும் இடத்தைக் கூறும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கிடையில், கொள்ளைக் குழுவில் இருந்த மற்றொருவர், ஜெயலட்சுமியின் இரு கால்களிலும் கத்தியால் வெட்ட, மூதாட்டி அலறியபடி தரையில் விழுந்தார். பின்னர், ஜெயலட்சுமி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க கம்மல், ஷியாமளா அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தாக்குதலில் மூதாட்டிக்கு இரண்டு கால்களிலும் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
