திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற திருடர்களில் ஒருவன், வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டதால் பயந்து ஓடியபோது, தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா என்பவரது வீட்டின் கேட்டில் மாட்டப்பட்டிருந்த பூட்டை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இரண்டு திருடர்கள் உடைக்க முற்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த அனிதா, உடனடியாகப் பக்கத்து வீட்டில் இருந்த தனது மாமனாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். வெளியே வந்த மாமனார் சத்தம் போட்டு கூச்சலிட்டதால், பயந்துபோன திருடர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
அதில், ஒருவன் பைக்கில் தப்பிச் சென்றுவிட, உடன் வந்த மற்றொரு திருடன் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வீட்டு உரிமையாளர் அனிதா, “எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என்னால்தான் ஒரு உயிர் போய்விட்டது என்பதால், இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். அவரை வீட்டில் எப்படி எல்லாம் வளர்த்திருப்பார்களோ என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது,” என்று கூறி நெகிழ்ச்சியுடன் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். உயிரிழந்த திருடன் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
