ஒரு அரிய வீடியோவில், தந்திரமான நரி ஒன்று இபீரியன் இம்பீரியல் கழுகு அமர்ந்திருக்கும் நீரோடை அருகே மெல்ல நகர்ந்து வருகிறது. சாதாரணமாக எந்தப் பறவையாக இருந்தாலும் நரியைக் கண்டதும் பறந்துவிடும், ஆனால் இந்தக் கழுகு தனது பிரம்மாண்டமான சிறகுகளை விரித்து, நரியை நேருக்கு நேர் தைரியமாக எதிர்கொண்டது. கழுகின் இந்த அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பார்த்த நரி, அதற்கு மேல் முன்னேறத் துணிவில்லாமல் தயங்கி நின்றது. ஒருகட்டத்தில் நரியைத் துச்சமாக மதித்த கழுகு, அங்கிருந்து நகரவே இல்லை; மாறாக, நரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அசால்ட்டாக நீரில் குளித்து விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

​சுமார் 80 செமீ நீளமும், இரண்டு மீட்டர் அகலமான சிறகுகளையும் கொண்ட இந்த வகை கழுகுகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிதானவை. தன் எல்லைக்குள் வரும் யாரையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் குணம் கொண்ட இவை, தரையில் இருக்கும் எந்த விலங்குக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. தனது இறக்கை விரிப்பு மற்றும் கூர்மையான பார்வையின் மூலமே நரியை விரட்டியடித்த இந்தக் கழுகின் ‘ராஜ’ பாணி வீடியோ, தற்போது இணையவாசிகளைப் பிரமிக்க வைத்து வருகிறது.