மும்பை லோக்கல் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் (First Class), ஒரு தெருநாய் எவ்வித சலனமுமின்றி இருக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. ரயில் பெட்டி பயணிகளால் நிரம்பி வழிந்த போதிலும், அங்கு நின்றுகொண்டு பயணம் செய்த மக்கள் யாரும் அந்த நாயின் தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அதற்கு இடமளித்து ஒதுங்கி நின்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். விலங்கு நல ஆர்வலரும், மூத்த காவல் ஆய்வாளருமான சுதிர் குடல்கர் (Sudhir Kudalkar) இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “வாயில்லா ஜீவன்கள் மீதான அன்பும் மனிதாபிமானமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது” என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், மும்பை மக்களின் இந்த உயர்ந்த குணத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். “உண்மையான சகவாழ்வு என்பது இதுதான்” என்றும், “அன்பு என்பது ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடற்றது; அது மரியாதை மற்றும் புரிதல் சார்ந்தது” என்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நெரிசல் மிகுந்த மும்பை ரயில்களில் ஒரு இருக்கை கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில், ஒரு நாய்க்காக மக்கள் நின்றுகொண்டு பயணம் செய்த இந்தச் செயல், மனிதாபிமானம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
