மேற்காசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் ஈரானுக்கு அமெரிக்கா ஏற்கனவே 10 நாள் அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்றிரவு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஈரானுக்கு நான் அளித்த 10 நாள் அவகாசத்தை நினைவில் கொள்கிறீர்களா? நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணி நேரமே உள்ளது. அதன் பிறகு நரகம் ஆளப்போகிறது கடவுளுக்கே மகிமை!” என்று பதிவிட்டுள்ளார். இது ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படப் போவதையே மறைமுகமாகக் காட்டுகிறது.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் கூட்டு ராணுவ கமாண்ட் தளபதி அலி அப்துல்லாஹி அலியாபாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஈரான் கட்டமைப்புகள் மீது கை வைத்தால், உங்களுக்கு நரகத்திற்கான கதவுகள் திறக்கப்படும். மேற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளும் எங்களது இலக்காக மாறும்” என அவர் சீறியுள்ளார்.மெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இதற்கிடையில், அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் உயிருடன் மீட்கப்பட்டால், அது போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, பதிலுக்கு வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது ஈரானின் முக்கிய எரிசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது சர்வதேச நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
