திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது பக்கத்து வீட்டுக்காரர்களான 2 இளைஞர்களுடன் அருகிலுள்ள கோவிலுக்கு காரில் சென்று வந்தார். கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அந்த இளைஞர்கள் திடீரென திட்டம் மாற்றி, பெண்ணை உதய்பூர் ரெயில் நிலையம் நோக்கி அழைத்துச் சென்றனர்.

அந்த வழியிலேயே, காரில் வைத்து இருவரும் சேர்ந்து பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், இரவு 10 மணியளவில் அவர்கள் பயணித்த கார் சோதனைச் சாவடியில் போலீசாரால் வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டது. அப்போது, பெண் தன்னிடம் நிகழ்ந்த கொடுமையை போலீசாரிடம் உடனடியாக தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், காரில் இருந்த மிதுன் மற்றும் போவர் என்ற இரு இளைஞர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திரிபுரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.