மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகளை அம்மாநில காவல்துறை அதிரடியாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி அசைவ உணவுகளை உண்ணச் செய்தல் மற்றும் மதமாற்றம் செய்ய வற்புறுத்துதல் போன்ற அதிர்ச்சியூட்டும் செயல்கள் நடந்துள்ளன.

இது குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, ஒரு உயர் அதிகாரி உட்பட ஏழு பெண் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாறுவேடத்தில் சாதாரண ஊழியர்களைப் போல அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து, கடந்த இரண்டு வாரங்களாக ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய இந்த ரகசிய வேட்டையின் போது, குற்றவாளிகள் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வதையும், அநாகரீகமான சைகைகள் செய்வதையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, ஒரு பெண்ணை ஏமாற்றி உறவு வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை நாகா மற்றும் தேவலாலி காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், இந்த மதமாற்ற மற்றும் பாலியல் வன்கொடுமை பின்னணியில் ஒரு பெரிய கும்பல் செயல்படுகிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.