ஆந்திர மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது அருவியில் தவறி விழுந்து மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டம் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலகும்மி அருவிக்கு, ஹுக்கும்பேட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவரும் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அருவியின் அழகை ரசித்தபடி மாணவிகள் செல்பி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீருக்குள் விழுந்தனர்.

இந்த கோர விபத்தில் திரிஷா, ரத்தினகுமாரி மற்றும் பவித்ரா ஆகிய மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற அஞ்சலி என்ற மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்கும் மோகத்தால் இளம் உயிர்கள் பறிபோகும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.