இந்தியாவில் திருமண பந்தம் புனிதமாகக் கருதப்படும் சூழலில், திருமணத்திற்கு வெளியே ரகசிய நட்பைத் தேடும் ‘கிளீடன்’ (Gleeden) செயலியில் இணைவோரின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமணமானவர்களுக்கான இந்த பிரத்யேக வலைதளத்தைப் பயன்படுத்துவதில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு 18 சதவீத பயனாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் (17%), தில்லி (11%), மும்பை (9%) மற்றும் புனே (7%) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி லக்னோ, சண்டிகர், சூரத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் இந்த மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலியில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீதம் பெண்களும் உள்ளனர். குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தளத்தில் இணையும் பெண்களின் எண்ணிக்கை 148 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது குறித்து கிளீடன் இந்தியாவின் மேலாளர் சிபில் ஷிடெல் கூறுகையில், “டிஜிட்டல் பயன்பாட்டின் வளர்ச்சி மற்றும் நவீன உறவுகள் குறித்த மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள அமைதியான புரட்சியையே இது காட்டுகிறது. குறிப்பாக பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது அவர்களின் தனிப்பட்ட முடிவுகளில் வளர்ந்து வரும் சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேலும் பயனாளர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் அதிகப்படியானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் பொதுவாக 25 முதல் 30 வயதுடைய பெண்களையும், பெண்கள் 30 முதல் 40 வயதுடைய ஆண்களையும் தேடுகின்றனர். குறிப்பாக மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஆடிட்டர்கள் போன்ற பொருளாதார ரீதியாக நிலையான ஆண்களுக்கே பெண்கள் முன்னுரிமை அளிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.