தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட எக்ஸ் (X) பதிவுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
“அதிகாரத்தை நோக்கிச் செல் என்ற அண்ணல் அம்பேத்கரின் லட்சியத்திற்கு எதிராக ஆ.ராசா போன்றோர் செயல்படுவதுதான், பட்டியலின சமுதாயம் இன்றைக்கும் பின்னோக்கி இருப்பதற்குக் காரணம்” என்று காங்கிரஸ் தரப்பில் சாடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் திமுகவையும், ஆ.ராசாவையும் அரசியல் ரீதியாகக் காப்பாற்றுவதற்குக் காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என்று சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சியின் தலைமை, அதற்காக திமுக எங்களுக்கு நன்றி பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கூட்டணிக் கட்சிகளைப் புண்படுத்தும் வகையிலான அநாகரிகமான கருத்துகளைத் தெரிவிப்பதையாவது தவிர்க்கலாமே என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஆ.ராசாவின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் சமாதான விளக்கம் அளித்த போதிலும், காங்கிரஸ் கட்சி தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படையாக்கித் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
