மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், இந்தியாவுக்குத் தேவையான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. சுமார் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் 33 கி.மீ அகலமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்க வேண்டும். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40% முதல் 50% வரை (தினசரி சுமார் 25-27 லட்சம் பீப்பாய்கள்) இந்தப் பாதை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது.
பிப்ரவரி 28 முதல் போர் தீவிரமடைந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பாதை முடக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொள்ளவும், தனது நட்பு நாடான இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யவும் ரஷ்யா முன்வந்துள்ளது.
இந்திய கடல் எல்லைக்கு அருகிலேயே சுமார் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் காத்திருக்கும் ரஷ்யக் கப்பல்களை உடனடியாக இந்தியத் துறைமுகங்களுக்குத் திருப்பிவிட ரஷ்யா சம்மதித்துள்ளது. வளைகுடா நாடுகளைப் போலன்றி, ரஷ்யக் கப்பல்கள் பால்டிக் கடல் வழியாக வருவதால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் இவற்றுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த எண்ணெய் விநியோகம் அடுத்த சில வாரங்களிலேயே இந்திய சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்த 25 நாட்களுக்குத் தேவையான அவசர காலக் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களில் 10-15 நாட்களுக்கான இருப்பு உள்ளது. இருப்பினும், போர் நீண்ட காலம் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. ரஷ்யாவின் இந்த 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் விநியோகம், இந்தியாவின் குறுகிய காலத் தேவையைப் பூர்த்தி செய்யப் பெரும் உதவியாக இருக்கும்.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகக் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்தது. ஆனால், தற்போதைய போர்ச் சூழலில் தேசிய நலன் கருதி மீண்டும் ரஷ்யாவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால எரிசக்தி உறவை மேலும் வலுப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும்இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய எரிசக்தி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
