தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவைச் சீண்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மாடலை முன்னிறுத்தியுள்ளார்.

“கூட்டணி என்பது தேர்தலில் மட்டும் ஒன்று சேர்வது அல்ல; தேர்தலுக்குப் பின் ‘பை-பை’ சொல்லிவிடும் போக்கும் சரியானதல்ல.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணி கட்சிகளான முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் போன்றவை கல்வி, நிதி, தொழில் போன்ற முக்கியத் துறைகளை நிர்வகிக்கின்றன.

அங்கு அதிகாரம் குவியாமல் பகிரப்படுகிறது. இந்த ‘கூட்டணி தர்மம்’ தமிழகத்திலும் மலர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியில் பங்கு கேட்பது ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை என்று விமர்சிக்கும் திமுகவினருக்கு மாணிக்கம் தாகூர் தனது பதிவில் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்:

“ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக திமுக தான் முதலில் அறிவித்தது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், 2016-ல் பெரும்பாலான கட்சிகள் ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்து திமுகவை கைவிட்டபோது, கலைஞரை முதல்வர் வேட்பாளராக ஏற்று காங்கிரஸ் மட்டுமே உறுதியாக நின்றது என்பதை மறந்துவிடக் கூடாதது.

கடந்த”2014-ல் தனித்து நின்றபோது திமுக பெற்ற வாக்குகள் வெறும் 23.9% தான். அதேசமயம் காங்கிரஸ் வீழ்ச்சியில் இருந்தபோது கூட 6.47% வாக்குகளைப் பெற்றது. எனவே, நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை.”

திமுகவின் சமூக வலைதளத் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியைச் சிறுமைப்படுத்தி எழுதுவதைக் கண்டித்துள்ள அவர், “எழுதும் போது பொறுப்புணர்ந்து, கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸின் இந்த “அதிகாரப் பகிர்வு” கோரிக்கை, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது, வரும் தேர்தலில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது.