கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்விளை அருகே நேற்று மாலை வேளையில் சோகம் ஏற்படுத்தும் விபத்து நிகழ்ந்துள்ளது. 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோவின் டயர் திடீரென கழன்று, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த மூவரும் படுகாயமடைந்தனர்.
விபத்தின் போது ஆட்டோவில் இருந்த ஒருவரை லாரி கீழே தூக்கி வீசியது. அதற்குள் விழிப்புடன் செயல்பட்ட லாரி டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தியதால், அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்த மூவரும் அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கொல்லன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
