டெல்லியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவருக்கு உதவாமல், அவரிடமிருந்த செல்போனைத் திருடிச் சென்ற இளைஞர்களின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லி ரன்ஹோலா காவல் எல்லைக்குட்பட்ட விகாஸ் நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நிலைதடுமாறி தரையில் விழுந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு அல்லது வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்த வேளையில், அவ்வழியே ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை அணுகியுள்ளனர். மயங்கிக் கிடந்தவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவான காட்சிகள் பார்ப்போரை அதிரவைத்துள்ளன.

 

கீழே விழுந்த நபரின் நிலையைப் பார்த்த இளைஞர்களில் ஒருவன், ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அந்த நபரின் செல்போனைத் திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த அந்த இளைஞன், அந்த நபரின் பைகளைத் தேடி வேறு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துள்ளான்.

அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவைக் கவனித்த அவன், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபர் பல மணி நேரம் கடும் வேதனையுடன் சாலையிலேயே கிடந்துள்ளார். இறுதியில் சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்தார். காலை 8 மணியளவில் அப்பகுதி மக்கள் திரண்ட பிறகே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.