இந்திய இரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இரயில் நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத இரயில் நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த இரண்டு நிமிட வீடியோவில், தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக நள்ளிரவு முதல் வரிசையில் முதல் ஆளாக நின்ற பயணி ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் காட்சிகள் உள்ளன. தான் முதல் ஆளாக நின்றதோடு, இரண்டு முறை ஓடிபி சரிபார்ப்புகளையும் முடித்த பிறகும், தனக்குக் கிடைக்க வேண்டிய தட்கல் டிக்கெட் ஒரு இடைத்தரகருக்கு (Broker) வழங்கப்பட்டு விட்டதாக அந்தப் பயணி குற்றம் சாட்டுகிறார்.
Caught red-handed! First in queue at railway counter, OTP verified twice, yet ticket given to a broker. Staff arguing when confronted. Tatkal scam still thriving. pic.twitter.com/BR9Z4H7ofs
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 24, 2026
இதனை அங்கிருந்த சக பயணிகளும் ஆதரித்துப் பேசும் சத்தங்கள் அந்த வீடியோவில் கேட்கின்றன. மேலும், அந்த வீடியோவின் சில பகுதிகள் மங்கலாக்கப்பட்டுள்ளதால், அங்கு ஏதேனும் பணப் பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பயணியின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த இரயில்வே ஊழியர்கள், இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், கணினி அமைப்பில் ஏற்பட்ட ‘சிஸ்டம் க்ளிட்ச்’ எனப்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தவறு நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், அனைத்துச் சரிபார்ப்புகளும் முறையாக முடிந்த பிறகும், முதல் ஆளாக நின்றவரின் கோரிக்கை எப்படித் தவிர்க்கப்பட்டது என்று அங்கிருந்த பொதுமக்களும், பாதிக்கப்பட்ட பயணியும் கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் பரப்புரை ஏற்பட்டது. இந்த வீடியோ எந்த இரயில் நிலையத்தில், எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
