உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆபரேஷன் தியேட்டருக்குள் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு மயக்க ஊசி செலுத்தி மருத்துவர் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. லக்னோவில் தனியார் மருத்துவமனையில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மே 19 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மே 21 அன்று மதியம் 3 மணியளவில், அந்தப் பெண்ணுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் விஜய் குமார் கிரி என்பவர், அந்தப் பெண்ணுக்கு அவசரமாக ஆக்சிஜன் செலுத்த வேண்டும் எனக் கூறி ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றுள்ளார். முதலில் அந்தப் பெண்ணின் மூத்த சகோதரியும், ஒரு நர்ஸும் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்களிலேயே மருத்துவர் விஜய் குமார் கிரி, அவர்கள் இருவரையும் வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, ஆபரேஷன் தியேட்டருக்குள் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மருத்துவர், பெண்ணின் கையில் பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் ஊசி வழியாக மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளார். இதில் அந்தப் பெண் சுயநினைவை இழந்துள்ளார். அந்த மயக்க நிலையிலேயே மருத்துவர் விஜய் குமார் கிரி, அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார்.
சுயநினைவு திரும்பிய பெண், தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவர் விஜய் குமார் கிரியைக் கைது செய்தனர்.
இந்த விவகாரம் மாநிலத் துணை முதல்வர் பிரஜேஷ் பாதக்கின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவரது கடுமையான உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு உடனடியாகச் சீல் வைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் விஜய் குமார் கிரியின் மருத்துவ உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
