சென்னையை அடுத்த ராயபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான தகராறில், லோடு வேன் ஓட்டுநர் நடுரோட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது, எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் ஆட்டோ ஓட்டுநருக்கும், லோடு வேன் ஓட்டுநருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (32), லோடு வேன் ஓட்டுநரான ரகு (42) என்பவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன், ரகுவின் மார்பில் கடுமையாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் காவல் துறையினர், உயிரிழந்த ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
