சட்டசபைத் தேர்தல் தோல்வி திமுகவுக்கு ஒரு பாடம் என்றும், திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களே தங்களின் மொபைல் போன்களில் நடிகர் விஜய்யின் படத்தை ‘டிபி’யாக (Profile Picture) வைத்திருப்பது வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
“நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் தோல்வி நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளது. நாம் அதிமுகவை மட்டுமே பிரதான எதிரியாக நினைத்துத் தேர்தலைச் சந்தித்தோம். ஆனால், ஆன்லைனில் தீவிரமாக அரசியல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) சரியாகக் கணிக்கத் தவறிவிட்டோம். திமுக ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்களை நாம் நிறைவாகச் செய்தோம். ஆனால், இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் சோசியல் மீடியாவில் அரசியல் செய்வதில் கோட்டைவிட்டுவிட்டோம்.
இன்று திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களே தங்களது மொபைல் போன்களில் விஜய் படத்தை ‘டிபி’யாக வைத்துள்ளனர். இது பார்ப்பதற்கே வேதனையாக இருக்கிறது. இனி நம் வீட்டுப் பிள்ளைகளின் மொபைல் போன்களில் தலைவர் ஸ்டாலின் படத்தை வைக்குமாறு அறிவுறுத்த வேண்டும். திமுகவில் இருக்கும் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாகச் செயல்பட்டு, கட்சி மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுகவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரே இம்முறை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்கும் குழுவிடம் நமது குறைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும். திமுகவுக்கு இப்போது சுயபரிசோதனை மிகவும் அவசியம்” என்று மூர்த்தி பேசினார்.
சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அமைச்சர்களாக இருந்த மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தோல்வியடைந்தனர். தேர்தல் தோல்விக்குப் பின் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சென்றது. இதனால் மதுரையில் தற்போது திமுகவுக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
