தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் தனது ஸ்டைலில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்; அவருக்கு மிகுந்த தைரியம் (Guts) உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்துப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இத்தகைய செயலை ‘தைரியம்’ என்று அழைப்பது முறையல்ல” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்குப் பதில் அளித்த மோகன் ஜி, அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுப்பது தவறு எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் தரப்பில் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கப்பட்டு வருகிறது. “கல்பாத்தி நிறுவனத் தயாரிப்பில் இருவரும் இணைந்து நடித்திருப்பதால், அந்த வீட்டுத் திருமண விழாவிற்குச் சேர்ந்து வந்தனர். இதில் உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை. விஜய்யைப் பார்த்துப் பயப்படுபவர்களே இத்தகைய வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா ஏன் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாததே இதற்குக் காரணம் என ஆதரவாளர்கள் கூறினாலும், இது ஒரு விவாதப் பொருளாகவே நீடிக்கிறது.

இதற்கிடையே, தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், தனிப்பட்ட உறவுகள் குறித்துப் பேசிய கருத்துக்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வளவு விமர்சனங்கள் எழுந்தபோதிலும், நடிகர் விஜய் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.