தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் முன்னதாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு சென்று நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்ததாக ஆதவ் கூறினார். இந்த நிலையில் தற்போது சிபிஐ தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக கரூர் சம்பவம் தொடர்பாக ஜனவரி 12ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனவரி 9-ம் தேதி ஜனநாயகன்  படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இன்னும் அந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் ரிலீஸ் ஆவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மேலும் நடிகர் விஜய்க்கு சென்சார் சான்றிதழ் படத்திற்கு வழங்கப்படாத நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இவ்வாறு நடப்பதாக ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.