தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் பிரசாரமாக மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் ‘விஜய் மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ. பார்த்திபன் தலைமையில், நிர்வாகிகள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மனு அளித்தனர். காவல் ஆய்வாளர் வேலுதேவனிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில், பொதுக்கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேபோல், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூர் மாவட்டத்திற்கும் விஜய் வருகை தர உள்ளதால், அங்குள்ள கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் பார்த்திபன் நிர்வாகிகளிடம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:
“நமது தளபதிக்காக 5 அல்லது 6 மணி நேரம் நம்மால் நிற்க முடியாதா? அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க முடியாது, உணவு உட்கொள்ள முடியாது. ஆர்வக்கோளாறில் சிலர் மலையில் கூட ஏறுவார்கள்; அவர்களை நீங்கள்தான் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு அதுதான் முக்கியம்.”
இவ்வாறு தொண்டர்களைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பது குறித்து அவர் பேசியுள்ளது கட்சி வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
https://www.facebook.com/reel/1153603350040346/
கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார். சேலம் மற்றும் வேலூர் மாவட்ட சந்திப்புகள், வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
