உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், திருமணமான முதல் இரவிலேயே மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி முகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டிற்கு வந்த நிலையில், முதலிரவு அன்று அவரது உடல்வாகு மற்றும் செயல்பாடுகளில் முகேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தான் திருமணம் செய்துகொண்ட பெண் ஒரு திருநங்கை என்பது அவருக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் நியாயம் கேட்டுள்ளனர்.
இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தவுடன், மணமகள் வீட்டில் இருந்த நகை மற்றும் உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குத் தப்பி ஓடிவிட்டதாக முகேஷ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மணமகள் வீட்டார் திட்டமிட்டே இந்த உண்மையை மறைத்துத் தன்னை ஏமாற்றிவிட்டதாக முகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“எனது வாழ்க்கையை அழித்துவிட்டார்கள், எனக்கு நீதி வேண்டும்” என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், மோசடி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணக் கனவுகளுடன் இருந்த இளைஞருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
