இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த இரு நபர்கள் அவருக்கு ‘தோஷம்’ இருப்பதாகக் கூறி நயமாகப் பேசியுள்ளனர்.

பின்னர், தோஷத்தைப் போக்குவதாகக் கூறி அவர் மீது விபூதி போன்ற மர்மப் பொருளைத் தூவிய நிலையில், தீபக்ஜெயினுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கும்பல், அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க வளையல்களைக் கழற்றி பாதுகாப்பாகக் கைப்பையில் வைக்குமாறு கூறியுள்ளது.

அதன்படி அவர் வளையல்களைப் பையில் வைத்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் பையுடன் சேர்த்து நகைகளைப் பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பினர். இது குறித்து தீபக்ஜெயின் அளித்த புகாரின் பேரில், யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.