அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகி, மாற்று கட்சி நிகழ்ச்சிகளில் தவெக கொடியை பயன்படுத்த வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால், அதை மீறி நேற்று மொடக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக கொடிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தது கவனம் ஈர்த்தது.

அதிமுக தலைவரை வரவேற்கும் நிகழ்ச்சியில், “நாளை நமதே! எங்களுடைய கஷ்டமான காலங்களில் தோள் கொடுத்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடியார்” எனும் வாசகத்துடன், நடிகர் விஜயின் புகைப்படம் இணைந்த பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால், அதிமுக–தவெக உறவுகள் மேலும் நெருக்கம் பெறுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணி அமைப்பில் புதிய மாற்றங்கள் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.