வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக அரசு தவெகவின் வளர்ச்சியைப் பார்த்து அச்சப்படுவதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலின் போது பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டு வருவதாகவும், ஆனால் நடிகர் விஜய் தன் தொழிலைக் கைவிட்டு மக்களுக்காகவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் சொத்து விவரங்களில் தன்னிடம் கார் இல்லை என்று கூறிவிட்டு, கோடிக்கணக்கான மதிப்புள்ள காரில் பயணிப்பதாகச் சாடிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு விஜய்யைக் கண்டுதான் ஆளுங்கட்சி பயப்படுகிறது என்றார்.
தவெகவின் பொதுக்கூட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை (SOP) அரசு விதிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, வேலூர் கூட்டத்தின் போது வழியெங்கும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், கரூரில் பாதுகாப்பு குறைபாட்டால் தொண்டர்கள் உயிரிழந்த வலியிலும்தான் விஜய் கண்கலங்கினார் என்று விளக்கமளித்தார்.
கட்சியை முடக்கவும், அவதூறு பரப்பவும் திமுக பல முயற்சிகளைச் செய்தாலும், அதையெல்லாம் கடந்து விஜய் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பதாக ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசினார்.
