தமிழக அரசியலில் டிடிவி தினகரன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்த பிறகு, அடுத்ததாக தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி வலுத்துள்ளது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணிக்காக இந்த நிமிடம் வரை யாரும் தங்களை அணுகவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். எனினும், உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், இப்போதைக்குத் தொண்டர்களைத் தயார்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், “பிரதமர் மோடி இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் வருகிறார், அன்றைக்குப் பார்ப்போம்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜக-வுடன் தேமுதிக மறைமுகப் பேச்சுவார்த்தையில் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அதிமுக-வா அல்லது பாஜக-வா என்ற ஊசலாட்டத்தில் இருக்கும் தேமுதிக, பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு ஒரு தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
