ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மிகக் கடுமையாகச் விமர்சித்துப் பேசியுள்ளார். “தமிழகத்தில் இப்போது திமுக-வுக்கும், விஜய்யின் தவெக-வுக்கும் தான் போட்டி; அதிமுக எங்குமே இல்லை” என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ‘துரோகி’ என்று கருதுவதாகவும், அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் 177 பேர் கூட வருவதில்லை என்றும் சாடினார். மேலும், ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் பாஜக-வின் அடிமைகளாகச் செயல்படுவதாகவும், தங்களது பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் பாஜக காலில் விழுந்து கிடப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​குறிப்பாகச் சசிகலாவை விமர்சித்த அவர், “கட்சி, ஆட்சி என அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு இப்போது எதை வைத்துக்கொண்டு இபிஎஸ்-க்கு பக்கபலமாகச் செல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இறுதியாக, “இன்னும் 10 நாட்களில் எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்” என்று கூறிய புகழேந்தி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளைக் கொண்டாடுவோருடன் பயணிப்பேன் எனத் தெரிவித்தார். அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.