மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தான் ஒருபோதும் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என்றும், அ.தி.மு.க-வின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே ‘தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை’ நடத்தி வருவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே கட்சியை நடத்தினார்கள் என்றும், கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது ஜெயலலிதா தன் மீது நம்பிக்கை வைத்து இரண்டு முறை முதலமைச்சர் பதவியை வழங்கியதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு முதலமைச்சராக விருப்பம் இல்லை என்றாலும், மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பை ஏற்றதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
தான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த காலத்திலும் துரோகம் செய்யவில்லை என்றும், அரசியல் பிரபலம் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சோதனைகளை வெல்ல முடியும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.
