மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு துப்பாக்கிப் புகைப்படம் காரணமாக காவல்துறையினர் நடத்திய அதிரடித் சோதனையில், சாதாரணக் குடும்பத்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  பள்ளிப் பேருந்து ஓட்டுநரான சௌரப் அகிர்வார் என்பவர், தனது கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அண்மையில் பதிவிட்டுள்ளார். இந்தத் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் சௌரப்பின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

சமூக வலைதளத்தில் துப்பாக்கியைப் பகிர்பவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்தச் சட்டவிரோத ஆயுதத்தைக் கைப்பற்றவுமே போலீசார் அங்குச் சென்றனர். ஆனால், வீட்டில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலின் போது போலீசாருக்குத் துப்பாக்கி கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக, வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு அல்மாரியைத் திறந்து பார்த்த காவல்துறை அதிகாரிகள் உறைந்து போய்விட்டனர்.

அந்த அல்மாரி முழுவதும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணத்தின் க்கெட்டுகளும், பைகளும் நிரம்பியிருந்தன. கைப்பற்றப்பட்ட பணம் சாதாரண எண்ணிக்கைக்கு மேல் இருந்ததால், உடனடியாகச் சம்பவ இடத்திற்குப் பணத்தை எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு விடிய விடியப் பணம் எண்ணப்பட்டது. காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி, அந்த வீட்டில் இருந்து மொத்தம் 3 கோடி ரூபாய் ரொக்கம் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாதாரணக் குடும்பச் பின்னணி கொண்ட சௌரப் அகிர்வாரின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது குடும்பத்தினர் அளித்த தகவல் போலீசாருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌரப்பின் தந்தை ராஜேஷ் அகிர்வார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் ஒரு கேஸ்  ஏஜென்சியில் வேலை செய்து வந்துள்ளார். சௌரப் கார் ஓட்டுநராகவும், அவரது தம்பி அங்கித் ஆட்டோ ஓட்டுநராகவும் வேலை பார்த்து வருகின்றனர். தாயார் இல்லத்தரசியாக உள்ளார். தாங்கள் ஏழைக்குடும்பம் என்றும், இந்த அமோகப் பணம் தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய மேல் விசாரணையில், போபாலில் அரசுப் பொறியாளராகப் பணிபுரியும் ரமேஷ் அகிர்வார் என்பவர்தான் இந்தத் தொகையைச் சொந்தக்காரரான சௌரப்பின் வீட்டில் கொண்டு வந்து வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் அகிர்வார் இந்தத் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றுள்ளதாகவும், யாரிடமும் இதுபற்றிச் சொல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எஸ்பி அனுராக் சுஜானியா, பணம் பதுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசுப் பொறியாளரான ரமேஷ் அகிர்வாரைக் கைது செய்யவும், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது, இது லஞ்சப் பணமா அல்லது சட்டவிரோதக் குவியலா என்பது குறித்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கோணத்திலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரணக் குடும்பத்து வீட்டில் துப்பாக்கித் தேடச் சென்ற போலீசுக்கு கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.