1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட்டாக இருந்த ராஜீந்தர் குமார் சர்மா மற்றும் அவரது 9 வீரர்கள் கொண்ட சிறிய குழுவினர், சுமார் 17,000 அடி உயரத்தில் உள்ள ‘பாயிண்ட் 5465’ பகுதியை நோக்கி முன்னேறினர்.

அப்போது அங்கிருந்த பதுங்கு குழிகளில் மறைந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் படையினர் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக லெப்டினன்ட் சர்மா தலைமையிலான இந்தியத் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்ட அதிரடியான மற்றும் உக்கிரமான தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் ராணுவம் பெரும் சேதத்தைச் சந்தித்தது.

அதோடு இந்திய வீரர்களின் இந்தத் துடிப்பான தாக்குதலைத் தாங்க முடியாமல் நிலை குலைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், திடீரென போரைத் தற்காலிகமாக நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த கோரி ‘வெள்ளைக் கொடி’ காட்டினர். பாகிஸ்தானின் வெள்ளைக் கொடியைக் கண்ட லெப்டினன்ட் சர்மா, தைரியமாக பேச்சுவார்த்தை நடத்த தனியாக முன்னேறிச் சென்றார்.

இதனால் அங்கே பாகிஸ்தான் அதிகாரி மேஜர் ஜாவேத், இந்தியத் தரப்பின் கடுமையான தாக்குதல் குறித்துக் கேட்டபோது, “நீங்கள் தான் முதலில் தாக்குதலைத் தொடங்கினீர்கள், நாங்கள் அதற்குப் தகுந்த பதிலடி மட்டுமே கொடுத்தோம்; நாங்கள் பாயிண்ட் 5465-ஐக் கைப்பற்றச் செல்கிறோம், மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவோம்” என்று சர்மா தீர்க்கமாக எச்சரித்தார்.

மேலும் நிலைமையைப் புரிந்துகொண்ட மேஜர் ஜாவேத், இனிமேல் தாங்கள் முதலில் தாக்க மாட்டோம் என்று கூறி, சர்மாவிற்கு சிகரெட் ஒன்றை அன்போடு வழங்கினார். அதற்குப் பதிலாக லெப்டினன்ட் சர்மா, அவசரகால உணவாகத் தன்னிடம் இருந்த ‘கேட்பரி’ சாக்லேட்டை அந்தப் பாகிஸ்தான் அதிகாரிக்குப் பரிசாகக் கொடுத்தார்.

இந்நிலையில் போர்க்களத்தின் கடுமையான சூழ்நிலையிலும் இரு நாட்டு அதிகாரிகளிடையே சிகரெட்டும் சாக்லேட்டும் பரிமாறப்பட்ட இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு, இந்தியப் படை வெற்றிகரமாக அந்தச் சிகரத்தைக் கைப்பற்றி மூவண்ணக் கொடியை ஏற்றியது. இந்த அரிய வரலாற்று நிகழ்வு கர்னல் சர்மாவின் ராணுவ வீர தீர செயல்களை விவரிக்கும் ‘சூர்வீர்’ என்ற புத்தகத்தில் விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளது.