மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் நெஞ்சை பதறவைக்கும் விபரீத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் விளிம்பில் அமர்ந்திருந்தார்.
இதைக் கண்ட கீழே இருந்த பொதுமக்களில் பெரும்பாலானோர், ஆபத்தில் இருக்கும் வாலிபரை எப்படிக் காப்பாற்றுவது என்று யோசிக்காமல், தங்களது கைபேசிகளில் வீடியோ எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர். ஆனால், அங்கிருந்த நபர் ஒருவர் மட்டும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். வாலிபர் இருந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அவர், பால்கனிக்குச் சென்று அந்த இளைஞரிடம் பேச்சுக்கொடுத்து அவரது கவனத்தைத் திசைதிருப்ப முயன்றார்.
அப்படியும் அந்த இளைஞர் கீழே குதிக்கத் தயாரான நொடிப் பொழுதில், சற்றும் எதிர்பாராத விதமாக அவரது கையைப் பலமாகப் பற்றிய அந்த நபர், வாலிபரை அப்படியே பால்கனியின் உள்பகுதிக்கு இழுத்து காப்பாற்றினார். இந்த அதிரடி மீட்பு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஆபத்தான சூழலிலும் சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த நபருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், அந்த இளைஞர் தற்கொலை போன்ற தீவிர முடிவை எடுத்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. தற்கால இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகள் எனப் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த இளைஞரின் விபரீத முடிவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
