தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி 300 கோடி ரூபாய் வரையில் வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். நேற்று சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் கிஸ் கிஸ் கிஸிக் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் மேடையில் பேசிய விஷயம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கு ரசிகர்கள் நடிகர் அல்லு அர்ஜுனிடம் தெலுங்கில் பேசுமாறு கூறிய நிலையில் அவர் நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழியில் தான் பேச வேண்டும் என்றார்.

நான் சென்னை பையன் என்றும் தற்போது தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழில் பேசுவது தான் தமிழ் மண்ணுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றும் கூறினார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் அல்லு அர்ஜுன் பேசினார். அதாவது தொகுப்பாளர் எந்த நடிகரின் படங்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் பார்ப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு அல்லு அர்ஜுன் ரஜினியின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவேன் என்றார். இதனை ரஜினி ஸ்டைலில் அல்லு அர்ஜுன் தெரிவித்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் அவர் தற்போது தான் ஒரு ரஜினியின் தீவிர ரசிகர் என்று கூறியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.