உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வாணியில், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பியின் சிகிச்சைக்காகப் பணம் செலவாவதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அண்ணன் ஒருவன் தம்பியை ஒன்றரை மணி நேரம் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சந்தீப் ஜெய்ஸ்வால் என்பவரது தம்பி சோனு நீண்டகாலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவச் செலவு பல லட்சங்களைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சந்தீப் தனது தம்பி சோனுவை மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். இந்தத் தாக்குதலின் போது சோனு மயக்கமடைந்த போதெல்லாம், அவருக்குத் தண்ணீர் குடிக்கக் கொடுத்து மீண்டும் மீண்டும் சந்தீப் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் சோனு பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் தாக்கப்படுவதைத் தடுக்க முயன்ற தாயையும், உறவினர்களையும் சந்தீப் மிரட்டியுள்ளார். “யாராவது தடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன்; காலையில் இவனது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வேன்” என்று மிரட்டியதால் பயந்துபோன குடும்பத்தினர் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டுள்ளனர். பின்னர், உறவினர் ஒருவர் அளித்த ரகசியத் தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தப்பியோடிய சந்தீப்பை பபோலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி (ரிவால்வர்), தோட்டாக்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சந்தீப் மீது கொலை வழக்கு மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாசமான தம்பியைப் பணத்திற்காக அண்ணனே அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
