நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் நடிகர் கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை, மத்திய நிதி அமைச்சரை இலக்கு வைத்து அமைந்திருந்ததால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் முதன்முறையாக உரையாற்றிய கமல்ஹாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
“பிச்சைப் பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்பதை அறிந்தவர் நீங்கள். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வேண்டுமானால் நீங்கள் நிதி திரட்டலாம். ஆனால், தமிழ் மொழி பிச்சை எடுக்கவும் உதவாது, திருடவும் உதவாது.” “தமிழையும் தமிழர்களையும் பார்த்து, ‘பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது’ என்று சிலர் கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.”
இவ்வாறு தமிழின் பெருமையைப் பேசுவதாகக் கூறி, நிதி அமைச்சரின் பழைய உரையைச் சுட்டிக்காட்டி கமல்ஹாசன் தனது கன்னிப் பேச்சை அமைத்திருந்தார். கமல்ஹாசனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் உடனடியாகத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அமைச்சகத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலங்களவையில் கமல்ஹாசன் தெரிவித்தது முற்றிலும் தவறான தகவல். தமிழ் மொழியை நிதியமைச்சர் ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை.
இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் (@ikamalhaasan) ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், @NewsTamilTV24x7 செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி,… https://t.co/ke9XcEV6PT pic.twitter.com/svMsTCxyaR
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 4, 2026
கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், தந்தை பெரியார் கூறிய கருத்தையே நிதியமைச்சர் மேற்கோள் காட்டினார். 1943-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதியிட்ட ‘விடுதலை’ இதழில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று பெரியார் குறிப்பிட்டிருந்த வரலாற்றுச் செய்தியைச் சுட்டிக்காட்டியே நிதியமைச்சர் பேசினார். அந்த வரலாற்றுப் பின்னணியை மறைத்துவிட்டு, நிதியமைச்சரின் சொந்தக் கருத்து போலச் சித்தரிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் அமைச்சகத் தரப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் கமல்ஹாசனின் இந்த உரை தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் பாராட்டி வரும் நிலையில், ஆதாரமற்ற தகவல்களைச் சபையில் பதிவு செய்வதாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். மாநிலங்களவையில் கமல்ஹாசனின் முதல் உரையே இத்தகைய பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
