உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) ஒருவரைத் தனது அழகால் மயக்கி, பாலியல் வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண், காவல் துறையில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளருடன் (SI) திட்டமிட்டு நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நட்பு நாளடைவில் நெருக்கமாக மாறவே, இருவருக்கும் இடையே பாலியல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது அனைத்தும் திட்டமிட்ட ஒரு சதி என்பதை அறியாத அந்த அதிகாரி, அப்பெண்ணை முழுமையாக நம்பியுள்ளார்.

தங்களுக்கு இடையேயான அந்தரங்க உரையாடல்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்த அந்தப் பெண், தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். அவற்றை வெளியிடுவதாக மிரட்டி, அந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே சில முறை ஆன்லைன் மூலம் பணம் பறித்துள்ள அப்பெண், மேலும் பணம் தராவிட்டால் பொய் வழக்கில் சிக்க வைப்பேன் என்றும், குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்தத் தொடர் மிரட்டல்களால் அந்த உதவி ஆய்வாளரும் அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்த அதிகாரியின் மனைவி, தனது கணவரைக் காக்க நேரடியாகக் களமிறங்கினார். அவர் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஷாலிமார் கார்டன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்தனர். அவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.