உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது ஆசிரியை மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி, அவரது உதட்டைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  ஒரு பள்ளியில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், ஆசிரியையிடம் நீண்ட நாட்களாக அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். இது குறித்து மாணவனின் குடும்பத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சில காலம் அமைதியாக இருந்த மாணவன் மீண்டும் தனது நடத்தையைத் தொடர்ந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆசிரியை, அந்தப் பள்ளியில் இருந்தே விலகி வேறு பள்ளியில் சேர முடிவு செய்தார்.

வேலையை விட்டு நின்ற பின்னரும் அந்த மாணவன் ஆசிரியையைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துள்ளான். இந்நிலையில், ஆசிரியை டியூஷன் எடுப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மாணவன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டான். ஆசிரியை தனது எதிர்ப்பைத் தெரிவித்தபோது, ஆத்திரமடைந்த மாணவன் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, கழுத்தை நெரித்துத் தாக்கியதுடன், அவரது இரு உதடுகளையும் கடித்துக் குதறிவிட்டுத் தப்பியோடினான்.

கடித்தது மட்டுமின்றி, கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியையின் முகத்தை அந்த மாணவன் சிதைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவன் ஆசிரியையை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஆசிரியை, முதலில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிலைமை மோசமடைந்ததால், அவர் ஆக்ராவில் உள்ள உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட ஆசிரியையின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், மெயின்புரி போலீசார் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசிரியர் – மாணவர் உறவுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.