மும்பை மீரா பயந்தர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் வினோதமான வடிவமைப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து அபாயம் குறித்த அச்சத்தைத் தொடர்ந்து, தற்போது அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணியைத் தற்காப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

மீரா பயந்தர் சாலை மற்றும் கோல்டன் நெஸ்ட் சந்திப்பை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மெட்ரோ தடம் 9-ன் ஒரு பகுதியாக அமையும் இந்த மேம்பாலம், தொடக்கத்தில் நான்கு வழிச்சாலையாக அகலமாக இருந்து, திடீரென ஒரு குறுகிய இடத்தில் இரண்டு வழிச்சாலையாக மாறுகிறது. இந்தத் திடீர் மாற்றத்தால் வாகனங்கள் நேராகச் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பின்வருமாறு: சாலையின் ஓரங்களில் விபத்து நேராத வண்ணம் தற்போது இரும்புத் தடுப்புகள் (Railings) அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதி இப்போது ஆபத்தான வளைவாகத் தெரியாமல், நேரான பாதையைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது.

மேம்பாலம் முடியும் இடத்தில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலேயே, நான்கு வழிச்சாலையைத் தொடர முடியாமல் இரண்டு வழியாகக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாலம் முடியும் இடம் குறுகலாக இருக்கும் பட்சத்தில், பாலம் தொடங்கும் போதே இரண்டு வழிச்சாலையாகத் திட்டமிட்டிருக்கலாம் அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தியிருக்கலாம் எனப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jenil Variya (@v_jenil)

இந்த வினோத வடிவமைப்பைக் கண்டு சமூக வலைதளப் பயனர்கள் கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை “இந்தியாவில் மட்டுமே காணப்படும் புதிய தொழில்நுட்பம்” என்றும், “ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டிய பாலம்” என்றும் விமர்சித்துள்ளனர். எனினும், ஒரு தரப்பினர் இது போன்ற மேம்பாலங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ளன என்றும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மேம்பாலம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, அந்தேரி மேற்கு முதல் மீரா பயந்தர் வரையிலான போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.